சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தன்னை காதலித்து வந்த ஜிம் மாஸ்டர் தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இளம்பெண், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார். அங்கு ஜிம் மாஸ்டராக பணியாற்றிய ஓட்டேரி சுபேதார் தெருவைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப், 27, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவில் இருந்தபோது, இளம்பெண்ணின் உடை, வெளியே செல்வது உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களில் இம்தியாஸ் ஷெரிப் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து படிப்படியாக விலகத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: உன் மகனை கொல்லப் போறேன்! தாய்க்கு போன் செய்த கள்ளக்காதலன்! 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

சில மாதங்களாக இருவரும் பேசாமல் இருந்த நிலையில், இம்தியாஸ் ஷெரிப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னுடன் பேசாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீடியோ அழைப்பிலும் இளம்பெண்ணுக்கு அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடியோ அழைப்பின் போது இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆபாசமாக தோன்றச் செய்ததாகவும், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின்னர் அதைக் காட்டி மிரட்டியதாகவும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியாக சந்திக்க வருமாறும் அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இம்தியாஸ் ஷெரிப் இளம்பெண்ணை மிரட்டி துன்புறுத்தியதாக கூறப்படும் தகவல்கள் தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பயன்படுத்தி மிரட்டுவது தொடர்பாக அச்சம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் பயப்படாமல் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: வழக்கை முடிக்க முயன்றது ஏன்? ஜெம் வீரமணி விவகாரத்தில் போலீசார் மீது விசாரணை!