தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆற்றிய உரை குறித்து சிஐடியு (CITU) தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக அரசின் கொள்கை முடிவுகளை வரவேற்றுள்ள அதே வேளையில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

இன்று (18.06.2026) தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழக அரசின் எதிர்காலக் கொள்கைகளும், இலக்குகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைகளுக்கு எதிரான நிதிக்கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை மற்றும் சமூகநீதிக்கு எதிரான கொள்கைகளைத் திட்டவட்டமாக நிராகரித்து, மதச்சார்பின்மையை இந்த அரசு உயர்த்திப் பிடித்திருப்பது உவப்பிற்குரியது. மத்திய அரசின் இத்தகைய தவறான நடைமுறைகளை எதிர்த்துத் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் சிஐடியு தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும்.
இதையும் படிங்க: 46 ஆண்டுகால சமூகநீதி போராட்டம்..!! சாதிவாரி கணக்கெடுப்பு... பூவை ஜெகன்மூர்த்தி வரவேற்பு..!
ஆளுநர் உரையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தொழிலின் உண்மையான இயங்கு சக்தியாக விளங்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏற்புடையதல்ல. மாநிலத்தில் குறைந்தபட்ச கூலிச் சட்டம், வேலை நேரச் சட்டம் மற்றும் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமைகள் கூடத் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக 'தொழில் புரிய தோதானச் சூழல் உருவாக்கப்படும் வேளையில், தொழிலாளர்களின் கொடுமையான சிரமங்களைத் தணிக்க அரசு அக்கறை காட்டவில்லை. தவெக அரசு தொழில் கொள்கை என்று அறிவிப்பதைப் போல, தனியாக ஒரு 'தொழிலாளர் கொள்கையையும் வகுக்க வேண்டும். தொழிற் தகராறுகளில் காவல் துறையின் தேவையற்ற தலையீடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் உடனே செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களைத் தேடி மருத்துவம், ஆஷா போன்ற திட்டப்பணியாளர்களின் பங்களிப்பை ஆளுநர் அறிக்கை அங்கீகரித்துள்ளது சரியானது என்றாலும், இவர்களை உடனடியாகக் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு ஊழியர்களாக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுத்துறைகளைப் படிப்படியாகத் தனியார்மயமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் முறை மற்றும் வெளிமுகமை (Outsourcing) பணி நியமனங்கள் உள்ளாட்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வழங்கல், ஆவின் மற்றும் சிவில் சப்ளைஸ் ஆகியவற்றில் இன்றும் தொடர்வது பெரும் உழைப்புச் சுரண்டலாகும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாகக் குறைந்தபட்ச கூலி மாற்றப்படாமல் கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் வயிற்றில் அடிக்கும் அவல நிலை நீடிக்கிறது. மாநில அரசு அறிவித்துள்ள 'பத்துத் தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதை' என்ற பட்டியலில் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சுயதொழில் புரிவோர், பெண் தொழிலாளர்கள் என்ற சொற்களே இடம் பெறாதது சிஐடியு-வுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியம் மகிழ்ச்சிக்குரியது என்றாலும், 42 சதவீத பெண் உழைப்பாளர்கள் உட்படத் தமிழகத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு தராமல் இந்த இலக்கை எட்ட முடியாது. எனவே, குறைந்தபட்ச மாதக் கூலியை 26,000 ரூபாயாக உயர்த்திச் செயல்படுத்த வேண்டும். கடந்த ஜூன் 8 அன்று மாண்புமிகு முதலமைச்சரை நேரில் சந்தித்துச் சமர்ப்பித்த சிஐடியு-வின் கோரிக்கை மனுவை முழுமையாக மனதில் கொண்டு புதிய தொழிலாளர் கொள்கையை வகுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு அன்போடு கேட்டுக்கொள்கிறது.
இதையும் படிங்க: கொடுமை..! அரசு மருத்துவமனைகளில் பறிபோகும் அப்பாவி உயிர்கள்... கொந்தளித்த சீமான்..!!