திமுகவின் பொதுக்குழு எப்போதுமே சென்னை அறிவாலயத்தில் தான் நடைபெறும். திமுகவின் 75 வருட வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே மதுரையில் பொதுக்குழு நடைபெற்றது. 29 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரையில் ஜூன் 1ஆம் தேதி அன்று மீண்டும் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தியின் கையில் ஒப்படைத்துள்ளது திமுக தலைமை. இதன் எதிரொளியாக மதுரை நகரம் எங்கும் திமுகா கொடிகள் பறக்கின்றன. நிகழ்ச்சி நடைபெறும் ஒத்தக்கடை பகுதியில் அறிவாலய மாடலில் மிக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

திமுகாவை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பகுதி செயலாளர்களில் ஆரம்பித்து அனைத்து அணியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் என 10,000 பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ளனர். இந்த சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக மு.க.அழகிரியும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி கட்டுப்பாடு...!

சமீபத்தில் தனது ஆதரவாளர்களான, இசக்கி முத்து, முபாரக், மந்திரி மன்னன், உதயகுமார் ஆகியோருடன் தனது இல்லத்திலேயே அழகிரி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தனக்கு வயதாகிவிட்டதாகவும், நான் கலைஞர் மகனாகவே இருந்துவிட்டு போகிறேன். தம்பி கட்சியையும் ஆட்சியையும் நன்றாகவே நடத்துகிறார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக தனது ஆதரவாளர்களிடம் அழகிரி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பாஜக தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுப்பதற்கு எதிராக திமுக போராடி வரும் இந்த சமயத்தில், சிறப்பாக களப்பணியாற்றுங்கள் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு அழகிரி அட்வைஸ் கொடுத்துள்ளாராம். மறுபுறம் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து திமுக தலைமைக்கு அனுப்பிய மன்னிப்பு கடிதம் குறித்து ஏதாவது தகவல் உண்டா? என கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அழகிரி விரைவில் நல்ல செய்தி வரும் எனக்கூறியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுக்குழுவிற்கு ஒருநாள் முன்னதாகவே மதுரைக்குச் செல்லும் ஸ்டாலின், அங்கு தனது அண்ணன் அழகிரி வீட்டில் இரவு விருந்து சாப்பிடவுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது. பல ஆண்டுகள் கழித்து அழகிரியும் ஸ்டாலினும் கைகோர்ப்பதால் இது திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதையும் படிங்க: பெரியாருக்கும் சாதி சாயம்! இதெல்லாம் என்ன வேலை? கடும் கண்டனத்தை பதிவு செய்த விஜய்..!