மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டது போரை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயர்வும் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது: “ஈரானில் குறிவைக்க வேண்டிய இலக்குகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசித்து போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொலைபேசி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், போர் முடிவுக்கு வர வேண்டுமானால் அமெரிக்காவும் இஸ்ரேலும் மூன்று முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!

முதலாவதாக, தாக்குதல்களால் ஈரானுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து சேதங்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக, சர்வதேச சட்டங்களின்படி ஈரானின் இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். மூன்றாவதாக, எதிர்காலத்தில் ஈரான் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்க வேண்டும்.
“போரை அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் தொடங்கின. இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அமைதி திரும்பும். வேறு வழியில்லை” என்று ஈரான் அதிபர் வலியுறுத்தினார். இந்த நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் போர் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.
இரு தரப்பு அறிவிப்புகளும் உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பொருளாதார பிரச்னைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் முடிவு எட்டப்படுமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!