தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், 3 நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் நடந்தன.

இதனிடையே முதல்வரை பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திமுக கூட்டணித் தலைவர்கள் நலம் விசாரித்து இருந்தனர். முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாகவே இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். தனது வழக்கமான பணிகளை விரைவில் மேற்கொள்வார் என்று தெரிவித்தது.
இதையும் படிங்க: விரைவில் உங்களை சந்திக்க உங்கள் ஊர்களுக்கு வருவேன்.. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் காணொலி மூலம் மக்களுடன் கலந்துரையாடினார். காணொலி வாயிலாக, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமின்றி மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
https://x.com/i/status/1949096826461925787
அந்த வகையில் 6வது நாளாக, இன்று காலை முதலே மருத்துவமனையில் இருந்தபடியே கட்சி மற்றும் அரசுப் பணிகளை முழுவதுமாக மேற்கொள்ளத் தொடங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின். பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ள நிலையில், முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் சார்பில் கலந்துகொள்ளும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், பிரதமரிடம் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பினார்.
இதன் தொடர்ச்சியாக திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சக்கரபாணி ஆகியோரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் பணிகள், ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்தபடி சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது வழக்கமான பணிகளை தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் சென்று மேற்கொள்வார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்! என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை.. ஜூலை 31ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!