தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் இந்தப் பயணம் இரு மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜயவாடாவுக்குப் புறப்படும் முதலமைச்சர், மதியம் சுமார் 3.30 மணிக்கு கன்னவரம் விமான நிலையத்தை அடைவார்.
அங்கிருந்து நேரடியாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குச் சென்று மாலை 4.15 மணிக்கு அவரைச் சந்திப்பார். இந்தச் சந்திப்பில் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்துவார்கள். ஆண்டுதோறும் 12 டிஎம்சி அடி நீர் வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும், அதன் முழு அளவு தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரு மாநிலங்களும் நட்புறவுடன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..! "பெரியார் அறிவுலகம்".! திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..!
சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்புக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வார். ஆந்திர பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் இரவு எட்டு மணிக்கு சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர முதல்வர்களின் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?... தங்க மோதிரம் திட்டத்தில் மீண்டும் குளறுபடி... கதறிய பச்சிளம் குழந்தைகள் ...!