தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழக அரசின் சமீபத்திய முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாகும். முன்னதாக இந்தப் பொறுப்பை திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் வகித்து வந்த நிலையில், அவருக்குப் பதிலாக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய இசை மற்றும் மக்கள் கலைகளைப் பல ஆண்டுகளாகப் பேணி வளர்த்து வரும் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது கலைத்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புறப் பாடல்களுக்குப் புத்துயிர் அளித்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர். திரைப்படப் பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றி வரும் இவர், ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’, ‘ஆளான நாள் முதலா’ உள்ளிட்ட பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளார்.

கலைமாமணி விருது உள்ளிட்ட பல கவுரவங்களைப் பெற்றுள்ள இவர், கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.நியமனம் குறித்து பேசிய புஷ்பவனம் குப்புசாமி, தமிழக அரசுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார். தற்போதைய அரசு சரியான நேரத்தில் உரிய மரியாதை வழங்கியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!
கிராமத்திலிருந்து வந்து மக்கள் இசையில் பட்டம் பெற்ற தான் இந்தப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால், நலிந்த கலைஞர்களுக்காகச் சிறப்பான சேவை செய்வதாகவும் உறுதி அளித்தார்.இந்த நியமனத்திற்குப் பின்னர் புஷ்பவனம் குப்புசாமி பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய்க்கு கிடைத்த குட்நியூஸ்... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கிரீன் சிக்னல்...!