தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு குறித்து நீண்டகாலமாக பரபரப்பு நிலவி வரும் நிலையில், இன்றைய விசாரணையில் இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் மற்றும் சங்கீதா இருவரும் சுமார் 27 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அதனால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு பின்னர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இதுவரை பலமுறை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரு தரப்பினரும் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் மூலம் பிரதிநிதித்துவம் செய்து வந்தனர். கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையும் படிங்க: இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!
அப்போது நீதிபதி சுஜாதா, முதலில் இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.இன்றைய விசாரணையில் சமரச நடைமுறை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப நல வழக்குகளில் சமரச முயற்சிகள் முதன்மையானதாகக் கருதப்படுவதால், நீதிமன்றம் இரு தரப்பினரையும் சமரச மையத்திற்கு அனுப்பி, அவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய உத்தரவிடலாம்.
இதையும் படிங்க: தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!