தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்கும் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கான பிரம்மாண்ட நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நாளை (ஜூன் 1, திங்கள்கிழமை) திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4:15 மணி முதல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடுமையான விஐபி (VIP) பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தவெக தலைமை நிலையச் செயலகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தவெக பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தலைமை நிலையச் செயலக அறிவிப்பில், "காவல் துறையின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க முன்கூட்டியே அனுமதி பெற்றவர்களுக்காக மட்டுமே மாவட்ட நிர்வாகிகளால் முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிரத்யேக 'QR குறியீடு' (QR Code) கொண்ட நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்குள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்; வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த QR குறியீடு அனுமதிச் சீட்டானது முற்றிலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதலமைச்சரின் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் மக்கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை என்றும், எனவே அவர்கள் யாரும் கண்டிப்பாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வர வேண்டாம் என்றும் தலைமை நிலையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!
காவல்துறையின் கடுமையான போக்குவரத்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி, நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை அதற்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே, பொதுப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே வரும் 5,000 நபர்களுக்குத் தேவையான குடிநீர், அவசர மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மைதானத்தில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த 'QR Code' அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சிக்கு வந்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தாமல், தங்களது இல்லங்களிலிருந்தே தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நேரலைகள் (Live Streaming) வாயிலாக இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தைக் கண்டுகளிக்க முழு ஒத்துழைப்பு தருமாறு அமைச்சர் என்.ஆனந்த் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!