கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (A-1), அவரது சகோதரர் கார்த்திக் என்ற காளீஸ்வரன் (A-2) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குணா என்ற தவசி (A-3) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!
இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சமூகத்தில் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்விதக் கருணையும் காட்ட முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மூவருக்கும் இயற்கை மரணம் எய்தும் வரை (சாகும் வரை) ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும் இந்தத் தீர்ப்பு அமைய வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.
குற்றவாளிகள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!