கோவையில் 22 வயது மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணுடன் நட்பாக பேசத் தொடங்கினார். பின்னர் வாட்ஸ்அப்பில் நெருக்கமான உரையாடல் ஆபாசமாக மாறியது. வீடியோ கால் மூலம் ஆடையின்றி பேச வற்புறுத்திய அந்த நபர்கள், அந்தக் காட்சிகளை பதிவு செய்து வெளியிடுவதாக மிரட்டி முதலில் 20 ஆயிரம் ரூபாய் பறித்தனர். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.
மாணவர் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், அவர்களது எண்ணையும் பெற்ற கும்பல் பெற்றோருக்கும் அதே வீடியோவை அனுப்பி மிரட்டியது. இறுதியில் பணம் கொடுக்க தயாரான நிலையில், ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி இதுகுறித்து கூறுகையில், “சமீப காலமாக இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஆபாச சைபர் மிரட்டல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

அவர் மேலும் தெரிவித்ததாவது: “டிஜிட்டல் காலத்தில் அறிமுகமில்லாதவர்களுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வது ஆபத்தானது. வீடியோ கால் மூலம் ஆபாசமாக நடந்துகொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எந்த வீடியோ, ஆடியோ அல்லது புகைப்படமும் பதிவாகாது என்ற தவறான நம்பிக்கை வேண்டாம். தெரிந்தவர்களாக இருந்தாலும் அந்தரங்க விஷயங்களை பகிரக்கூடாது.”
“ஆண்கள் பெரும்பாலும் முன்பின் அறிமுகம் இல்லாத மோசடி கும்பல்களிடம் சிக்குகின்றனர். பெண்கள் தங்களுக்கு நெருக்கமான காதலன், நண்பன் போன்றவர்களிடம் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து மாட்டிக்கொள்கின்றனர். புகைப்படங்களை மார்பிங் செய்து தவறான காட்சிகளாக உருவாக்கி மிரட்டுவது, தனிப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி பணம் கேட்பது போன்ற புகார்களும் வருகின்றன” என்று அவர் எச்சரித்தார்.
சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இன்ஸ்பெக்டர், “இத்தகைய சூழலில் பயந்து பணம் கொடுப்பது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும். உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும். ரகசியம் பாதுகாக்கப்படும்” என்று அறிவுறுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இந்த சம்பவம், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணையத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. அறிமுகமில்லாதவர்களுடன் ஆபாச உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது, தனிப்பட்ட வீடியோக்களை பகிராமல் இருப்பது ஆகியவை இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும்.
இதையும் படிங்க: கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!