சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் பதவியேற்ற புதிய அரசில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக பிரிவினரின் கோரிக்கைகளே காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நான்கு நாட்களுக்கு மேலாகியும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் பதவி விருப்பத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நெருக்கடியும், அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக பிரிவினரின் (வேலுமணி தரப்பு) கோரிக்கைகளுமே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

தவெக வட்டாரங்கள் தெரிவிக்கையில், “மே 18ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படலாம்” என்று கூறப்படுகிறது.
அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளன. விசிகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். திருமாவளவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கும் இடம் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி தரப்பில் உள்ள 25 எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் பங்கு கோரியுள்ளனர். முதலில் 8 இடங்களை கோரிய இந்தக் குழு, பின்னர் 5 இடங்களாக குறைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கட்சித் தாவல் தடை சட்டம் காரணமாக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, திருமாவளவன் தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. விசிக இணைய ஒப்புக்கொண்டால் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாமதம் அரசின் ஆரம்பக் கட்ட செயல்பாட்டை பாதித்துள்ள நிலையில், அனைத்து தரப்பு பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!