தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்தக் கூட்டணியும் இன்றி இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 10 இடங்கள் குறைவாக உள்ளது. இந்த எதிர்பாராத முடிவுகள் திமுக மற்றும் அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே திமுகவுடன் இருந்த மனக்கசப்பு அதிகரித்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை தவெக-வுடன் இணைவதற்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி வேணும்! பேரத்தை ஆரம்பித்தது பாமக! தவெக விஜய் தரப்பு பதில் என்ன?

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் முன்பு தவெக-வுடன் கூட்டணி வாய்ப்பை மூடியிருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லி தலைமை தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்பே தவெக-வுடன் கைகோர்க்க விரும்பிய காங்கிரஸ் நிர்வாகிகளின் எண்ணம் இப்போது நிறைவேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதன் மூலம் இழந்த வாய்ப்பை ஈடுகட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடும் மாற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கும் பாதை இன்னும் தெளிவடைந்துள்ளது.
தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் துரிதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக விஜய்க்கு கூட்டணி கதவு திறந்தாச்சு! யூடர்ன் போட்டது காங்., விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்!!