வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. நாடு தழுவிய போராட்டங்கள் காரணமாக வங்கதேசம் அமைதியை இழந்துள்ளது.
இந்தச் சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் ராகுல் காந்தி காசா பிரச்னையை மட்டுமே பேசுவதாகவும், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் (சஹரன்பூர் தொகுதி), பா.ஜ.க.வுக்கு வேறு வேலை இல்லை என்று கிண்டலாக தெரிவித்தார். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தனக்கு தலைவர்கள் என்று கூறிய அவர், இருவரையும் இந்திரா காந்தியின் இரு கண்கள் போல பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருங்கால பிரதமர் பிரியங்கா காந்தி?! காங்., எம்.பி-க்கள் சப்போர்ட் அவருக்குத்தான்! கொளுத்தி போடும் ராபர்ட் வாத்ரா!
முன்னதாக அளித்த பேட்டியில் பிரியங்கா காந்தியை "அடுத்த இந்திரா" என்று போற்றிய இம்ரான் மசூத், பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால் வங்கதேசத்தில் ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது என்று கூறியிருந்தார்.

இப்போது அதை மேலும் விளக்கிய அவர், பிரியங்கா தலைமையில் அண்டை நாடுகளுடனான உறவுகள் சுமுகமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியாக தோல்வி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கவனத்தை திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதாக விமர்சித்தார்.
மேலும், வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்ரான் மசூதின் இந்தக் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள் பிரியங்கா காந்தியை எதிர்கால தலைவராக முன்னிறுத்தும் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வங்கதேச நிலவரம் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்தும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் தோல்வியால் துவளும் காங்கிரஸ்!! பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?