திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டப் பெயர்ப்பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக முகப்பில், 'Divisional Railway Manager' என்பதற்கு இணையாகத் தமிழில் 'கோட்ட ரயில் மேலாளர்' என்று இருக்க வேண்டிய இடத்தில், கூகுள் டிரான்ஸ்லேட் உதவியுடன் மிகத் தவறான மற்றும் பொருளற்றத் தமிழ் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, கீழ்மட்ட அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இத்தகையத் தவறுகள் நடக்கின்றன. ஆனால், இதனால் மத்திய அரசு திட்டமிட்டு இந்தியைத் திணிக்கிறது என்ற தேவையற்றக் குற்றச்சாட்டு எழுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் வேறு! நட்பு வேறு! விமர்சனங்களை தாண்டி தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்!
தமிழகத்தில் உள்ள ரயில்வே அலுவலகங்களில் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்தும்போது, முறையானத் தமிழறிஞர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு சரிபார்த்த பின்னரே பலகைகளை அமைக்க வேண்டும் எனத் தமிழிசை வலியுறுத்தியுள்ளார். இனி வரும் காலங்களில் இத்தகையத் தவறுகள் நிகழாமல் இருக்க அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் கோரியுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் 'இந்தித் திணிப்பு' விவகாரம் உணர்வுப்பூர்வமான ஒன்றாக இருக்கும் சூழலில், ரயில்வே துறையின் இந்தத் தவறு திமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனைச் சரி செய்யவே தமிழிசை இந்த அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளார்.
திருச்சி ரயில்வே நிர்வாகம் தற்போது அந்தத் தவறானப் பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு, சரியானத் தமிழ்ப் பெயருடன் புதியப் பலகையை வைப்பதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!