டெல்லியில் பெரிய தாக்குதல் சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதாக கூறப்படும் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், இந்தக் கும்பல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஜாத் பாட்டி மற்றும் அவரது உதவியாளர் அஜ்மல் குஜார் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இவர்களின் அறிவுறுத்தலின்படி செயல்பட்ட கும்பல், பஞ்சாப் மாநிலம் வழியாக சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தி டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகித்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், பல மொபைல் போன்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் விரைவில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை தூண்டி இளைஞர்களை கும்பலில் இணைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

இதுமட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வர்த்தகத்திலும் இந்தக் கும்பல் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டத்தில் இவர்கள் செயல்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் டெல்லி, காசியாபாத் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளுக்கு சென்று உளவு பார்த்துள்ளனர். அங்குள்ள முக்கிய கட்டிடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளிநாட்டில் இருந்த தொடர்புடைய நபர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம் பெரிய அளவிலான சதித் திட்டம் தடுக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ராணுவ நடமாட்டத்தை கண்காணித்த உளவாளி கைது! சிசிடிவி காட்சிகளை பாக்., மற்றும் வெளிநாடுகளுக்கு விற்றது அம்பலம்!