மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அளவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரருமானவர், 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், இந்தி செய்தி தொலைக்காட்சி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டது.
வழக்கின் விசாரணையில், நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தோனி தரப்பில் எழுப்பப்பட்ட 17 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கேள்விகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு குறுக்கு விசாரணைக்காக எழுப்பப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்… ஐகோர்ட்டில் அவசர முறையீடு!
மேலும், தோனி போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிடும்போது ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து வாழ்க்கை நிராகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சாட்சி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், அவர் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தோனி ஒரு பிரபலமானவர் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரையிலான காலத்தில், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஒரு இடத்தைத் தேர்வு செய்து வாக்குமூலம் பதிவு செய்ய தோனி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்று, உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக உறுதியளித்தது. வாக்குமூலம் பதிவு முடிந்த பிறகு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தான் ஆட்சி செய்றாரு! அரசு தரப்பு விளக்கத்தை கேட்டு ஷாக் ஆன நீதிபதி...