தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். "இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்து வாக்களிக்கும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது" என்று அவர் கிண்டலடித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார். 20 ஆண்டு காலக் காத்திருப்பு: கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யப்படாத தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) இப்போது ஏன் அவசரமாகச் செய்யப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, 1,56,555 பேர் இன்றுதான் செத்திருக்கிறார்கள். இவர்கள் கடந்த 20 வருஷமா உயிரோட இருந்தாங்களா? 5 வருஷத்துக்கு முன்னாடி, 10 வருஷத்துக்கு முன்னாடி செத்தவங்க எல்லாம் இன்னைக்குதான் செத்ததா கணக்குக் காட்டுறது எந்த விதத்தில் நியாயம்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தலின் போது இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டுப் போடப்படுவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்து ஓட்டுப் போடும் அதிசயம் இங்கேதான் நடக்கிறது என்று அவர் சாடினார்.
இதையும் படிங்க: டெல்லியில் திடீர் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை!
வரைவுப் பட்டியல் வெளியான பிறகு அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது, இது இறுதிப் பட்டியல் அல்ல. தேர்தல் ஆணையம் ஒரு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது. அ.தி.மு.க சார்பில் ஒவ்வொரு பூத் வாரியாகப் பட்டியலைத் தீவிரமாக ஆய்வு செய்வோம். தகுதியுள்ள நபர்கள் நீக்கப்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்றவர்கள் (இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள்) சேர்க்கப்பட்டிருந்தாலோ, உரிய ஆதாரங்களுடன் படிவங்களைச் சமர்ப்பித்துத் திருத்தங்களை வலியுறுத்துவோம்.
ஒருவர் ஒரே நேரத்தில் சென்னை மற்றும் சொந்த ஊர் என இரண்டு இடங்களில் வாக்கு வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இதுவே SIR-ன் நோக்கமாக இருக்க வேண்டும். "தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்தாலும், அரசியல் கட்சிகளாகிய நாங்கள் அந்தப் பட்டியலைத் துல்லியமாகச் சரிபார்ப்பதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!