தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டப் பேச்சைத் தொடர்ந்து செங்கிப்பட்டியில் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான கருத்துகளைப் பதிவு செய்தார்.
சென்னை செல்லவதற்காகத் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் காணச் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எந்தவித தவறான எண்ணத்திலும் நான் பேசவில்லை; யாரையும் தாழ்த்தியோ, குறிப்பாகப் பெண்களைத் தாழ்த்தியோ பேசுவதற்கு எனக்குத் துளிகூட எண்ணம் கிடையாது. என்னை எனது பெற்றோர் அப்படி வளர்க்கவில்லை. எனக்குத் திருமணமாகி ஒரு மனைவி இருக்கிறார்; அவருடன் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தையும், தங்கையும் இருக்கிறார்கள். எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் எனது சொந்தக் குடும்பமாகவே நினைக்கின்றேன்.
இதையும் படிங்க: #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!

என் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தலாம் என இந்தத் தரங்கெட்ட அரசு நினைத்தது. ஆனால் அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை. எனது கைதைக் கண்டித்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற கழக உடன்பிறப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நான் இரட்டை அர்த்தத்தில் (டபுள் மீனிங்) பேசவில்லை; ஒரே அர்த்தத்தில் (சிங்கிள் மீனிங்) தான் பேசினேன். காவிரி நீர் வர வேண்டும் என்றுதான் பேசினேன். விவசாயிகளின் உரிமைகளைக் கேட்காத ஒரு டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிறார். விவசாயிகளுக்குத் தவெக அரசு செய்த துரோகங்கள் குறித்துப் பேசியதால் என் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. மீண்டும் பேசுவேன்; சட்டரீதியாகச் சந்திக்கத் தயார்.
விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்து நான் பேசியதை கட்-காப்பி செய்து நேஷனல் மீடியா வரை ஒளிபரப்பு செய்துள்ளனர். சில அரசியல் தலைவர்கள் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமலும், ஆராயாமலும் நான் தவறாகப் பேசிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்து இருப்பது வருத்தமளிக்கிறது.
காவிரி நீர் உரிமைக்காகவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும் நூறு மடங்கு அதிகமாகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!