தீபாவளி பண்டிகைக்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றுவோர் மற்றும் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் திடீரென அதிகரிக்கும் பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்ததாக புகார்கள் குவிந்தன. இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனடியாக அனுமதியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்கள் இது தொடர்பான புகார் அளிக்க 18045161 என்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கட்டண விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசின் விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறி செயல்படும் வாகனங்களை சிறை வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!
இதனையடுத்து சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல சுமார் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 3000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சுமார் 4000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்பொழுது 2600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இருந்து கோவை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் முன்பதிவு இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!