சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக - தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக தொடங்கப்பட்ட காலம் தொட்டு இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. இதனால் இது தேமுதிக வரலாற்றில் முதல் முறையாகும்.
தேமுதிக தரப்பில் திமுகவிடம் 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடம் கேட்டிருந்தது. மேலும் விஜயபிரபாகரனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இதுக்கு மேல கேக்காதீங்க?! அவ்வளவு தான்! கூடுதல் தொகுதி கேட்கும் கூட்டணி கட்சிகள்! திமுக கறார்!
முதல்வர் ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தரப்பில் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ராஜ்ய சபா இடம் கேட்டபோது எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்ததால் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் இணைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். விஜயகாந்தின் தாயார் பெயர் ஆண்டாள் என்பதால் இது குறியீடாக பார்க்கப்படுகிறது. 2011-ல் அதிமுக கூட்டணியை உறுதி செய்தபோதும் பிரேமலதா ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்திருந்தார்.
2016-ல் கருணாநிதி தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும் என்று நம்பினார். "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" என்று பேசினார். ஆனால் விஜயகாந்த் திடீரென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இதனால் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது.
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு "பழம் நழுவி பாலில் விழுந்துள்ளது" என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேமுதிகவின் இல்லம் தேடி உள்ளம் நாடி சுற்றுப்பயணம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி அறிவிப்பு தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும். திமுக கூட்டணி இன்னும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம்?! முடிந்தது பேரம்?! ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் விசிட்! இதுதான் காரணம்?!