காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த திமுகவின் நடவடிக்கையை சுட்டிக்காட்டிய அவர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையின் அணுகுமுறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ரகுபதி வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் கட்சி சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தினசரி உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதோடு, டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். மேலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அறிவித்துள்ளார்.
ஆனால் தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான இந்தப் பிரச்சினையில் தவெக அரசு மிதமான போக்கையும் மெத்தனத்தையும் கடைப்பிடித்து வருவதாக ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், காவிரி நடுவர் மன்றம் அமைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!

‘கட்சித்தாவல் வல்லுநர்’ என்று அழைத்து, நிர்மல் குமார் தனது தான்தோன்றித்தனமான கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முதல்வர் விஜய்யும் நீர்வளத்துறை அமைச்சரும் மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையான கருத்தை தெரிவிக்காததை சுட்டிக்காட்டிய ரகுபதி, அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்களையும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டையும் அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
முக்கியப் பிரச்சினையில் முதல்வர் அமைதியாக இருப்பதும், வார இறுதிகளில் முழு ஓய்வு எடுப்பதும் விவசாயிகளிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி தினமும் குறிப்பிட்ட அளவு நீர் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில், தமிழகம் போதுமான நீரைப் பெறாத சூழல் நிலவுகிறது.
இந்தப் பின்னணியில், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ரகுபதி வலியுறுத்தியுள்ளார். மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையைத் தவிர்த்து, அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஏன் இந்த அவசர மனு..?? டி.கே சிவக்குமாரை இணைத்து திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார்..!!