கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்டுள்ளதால் தி.மு.க.வினர் கடும் வருத்தத்தில் உள்ளனர். ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியைத் தழுவியது. இந்த முறை மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் கட்சியினர் களமிறங்கியுள்ளனர். கொங்கு மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 39 தொகுதிகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தேர்தல் வியூகத்தின் மீது கட்சியினர் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இருப்பினும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், கொ.ம.தே.க. மற்றும் தே.மு.தி.க. ஆகியவை கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்டுள்ளன. இது தி.மு.க.வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக - மார்க். கம்யூ.,! தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி!! இறுதிக்கட்ட தொகுதி பங்கீட்டில் நினைத்தது கிடைக்குமா?

தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கோவை தெற்கில் காங்கிரஸ் ஏற்கனவே இருமுறை தோற்றுள்ளது. மக்கள் நீதி மய்யமும் அங்கு சீட் கேட்கிறது. சிங்காநல்லூரில் கமல் கட்சி ஓட்டுகளைப் பிரித்ததால் நாங்கள் தோற்றோம். லோக்சபா தேர்தலில் அண்ணாமலை அதிக ஓட்டு பெற்றதால், அங்கு வலுவான தி.மு.க. வேட்பாளரை நிறுத்த வேண்டும். தொண்டாமுத்தூரில் வேலுமணியை எதிர்கொள்ள தி.மு.க.வே நேரடியாகப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.
மேலும், “கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி கொடுத்தால், அவர்களால் வெற்றி பெற முடியாது. தி.மு.க.வினரே களத்தில் இறங்கி வேலை செய்து, செலவும் செய்து ஜெயிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்” என்கின்றனர்.
உளவுத்துறை அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. அதனால் தி.மு.க. தலைமை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்காமல், பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
2026 தேர்தலில் கோவை மாவட்டத்தை தி.மு.க. கைப்பற்றுமா? அல்லது கூட்டணி அழுத்தத்தால் சமரசம் செய்யுமா? என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!