கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், உடல் வெப்பம் அதிகரித்தால் சுயமாக பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது ஆபத்தானது என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இதைவிட அதிகமாக வெப்பநிலை உயர்ந்தால் தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், சதைப்பிடிப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலர் இந்த நிலையில் உடனடியாக வெப்பத்தை குறைக்க பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுகின்றனர். ஆனால் இது தவறான முடிவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி இது குறித்து கூறியதாவது: “வெயில் காரணமாக உடல் வெப்பம் அதிகரித்தால், சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலை நீரில் நனைத்த துணியால் துடைத்து, விசிறி வீசவும். குளிர்ந்த நீர், இளநீர், மோர் ஆகியவற்றை அடிக்கடி கொடுக்கவும். குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுக்கச் செய்யவும். மயக்கம் அல்லது கடுமையான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் அதிகரிக்கும் சிசேரியன்! தனியார் மருத்துமனையில் 54%! மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 88%!

மேலும் அவர் கூறுகையில், “பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் கிருமிகளால் வரும் காய்ச்சலுக்கு மட்டுமே பயன்படும். வெயில் வெப்பத்துக்கு இவை பயன்படாது. மாறாக கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை அதிகம் உட்கொள்வது ஆபத்தானது” என்று எச்சரித்தார்.
தற்போது வெயில் தீவிரமாக உள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, நிழலில் தங்குவது, இலேசான உடைகளை அணிவது, வெளியில் செல்லும்போது தலையை மூடிக்கொள்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வெயில் சம்பந்தமான உடல்நலக் குறைவுகளுக்கு சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, சரியான மருத்துவ உதவியை நாடுங்கள் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!