விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சரோஜா மற்றும் அவரது கணவர் சோலைமலை ஆகிய இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களது இல்லத்தில் மர்மமான முறையில் தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரையரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பணத் தகராறு காரணமாக இக்கொலையைச் செய்ததாகவும், நகைகளைத் திருடியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றம், துரையரசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து துரையரசன் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆஜராகி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது காவல்துறை விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது என பாதித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த ஒருவர், சம்பந்தமே இல்லாத ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்து வாக்குமூலம் அளித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. திருடப்பட்டதாகக் கூறப்படும் வளையல்கள் உயிரிழந்தவரின் உடலிலேயே இருந்ததைப் புகைப்படங்கள் காட்டுகின்றன. எனவே, நகை மீட்பு நடவடிக்கை புனையப்பட்டதாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகைகள் சேகரிக்கப்பட்ட விதத்தில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை, அதில் பல முரண்பாடுகள் உள்ளன.
நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், குற்றத்தின் தீவிரத்தையோ அல்லது அதன் கொடூரத்தையோ கண்டு வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவொரு தண்டனையும் வழங்க முடியாது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவரை தண்டித்ததன் மூலம் விசாரணை நீதிமன்ற நீதிபதி தவறிழைத்துள்ளார். இது சட்டப்படி அனுமதிக்கப்படமாட்டாது.
அரசு தரப்பு ஆதாரங்கள் நம்பிக்கையைத் தரவில்லை, அவை செயற்கையாகத் தோன்றுகின்றன. உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியாத விரக்தியில், புலனாய்வு அமைப்பு நம்பகமான ஆதாரங்கள் மூலம் உண்மையை நிரூபிப்பதற்குப் பதிலாக ஒரு வழக்கைக் கட்டமைக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரே இந்தக் குற்றத்தைச் செய்திருப்பார் என்ற ஆரம்பக்கட்ட சந்தேகம், அவரேதான் இந்தக் குற்றத்தைச் செய்தார் என நம்பிக்கையாக உருமாறுகிறது. ஒரு குற்றத்தைச் செய்தவர் யார் என்று அடையாளம் காண முடியாதபோது ஏற்படும் விரக்தியைத் தவிர்க்க, மனித மனம் இத்தகைய தந்திரத்தைச் செய்கிறது. ஒரு வழக்கில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பதில் ஐயமில்லை. அந்தப் படுகொலைகளைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். ஆனால், யாரையாவது ஒருவரை எப்படியாவது குற்றவாளி என்று அறிவிப்பதன் மூலம் மட்டும் கடமை முடிந்துவிடாது. அரசுத் தரப்பு இந்தக் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது எனக்கூறி, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி வைக்கும் நிலை வராது... எதிர்பாராத இடத்தில் இருந்து தவெகவிற்கு வந்த பதிலடி...!