சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை முதல்வர் விஜய்க்கு கடந்த 15ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. த.வெ.க., ஆட்சியின் தொடக்கத்திலேயே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க மாநில அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சென்னை சிறப்பு PMLA நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாததால் விசாரணை தொடங்கவில்லை.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது அமலாக்கத்துறை இதே கோரிக்கையை வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டது. தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள த.வெ.க., அரசுக்கு இது முதல் பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமலாக்கத்துறை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய 3 பக்க கடிதத்துடன் புகார் தொடர்பான ஆதாரங்கள், ரகசிய விசாரணைக் குறிப்புகள் மற்றும் புகார் நகல் ஆகியவை பென் டிரைவில் இணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரூர்காரர்களின் மண்ணை தூவி ஆட்டைய போட்ட கோவை திமுக!! தீர விசாரிக்கும் செந்தில்பாலாஜி குரூப்ஸ்!

செந்தில் பாலாஜி 2018-ல் திமுகவில் இணைந்தார். 2023 ஜூனில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் சிறையில் இருந்த பின்னர் 2024 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன்பின் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற அவர், நீதிமன்ற ஆட்சேபனைக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.
அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி ஆளும் கட்சியில் இருந்ததால் முந்தைய அரசு திட்டமிட்டு அனுமதி வழங்க தாமதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. தற்போது புதிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் அனுமதி அளித்தால் திமுகவுக்கு பெரும் சோதனையாக அமையும் என கூறப்படுகிறது. மறுபுறம் அனுமதி மறுக்கப்பட்டால், அரசியல் குறுக்கீடு என்ற குற்றச்சாட்டு எழும் அபாயம் உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான முடிவு முதல்வர் விஜய்யின் தலைமைத்துவத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். த.வெ.க., அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவு அரசியல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!