இரு ஆண்டுகளுக்கும் மேலான ரத்தம் சிந்திய போருக்குப் பிறகு, காசாவில் அமைதி நிழலின் நோக்கி முதல் பெரிய அடி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற எகிப்து உச்சி மாநாட்டில், காசா அமைதி திட்ட ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை உலகத் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதில் முதல் நபராகக் கையெழுத்திட்ட டிரம்ப், "மத்தியகிழக்கில் அமைதி வந்துவிட்டது" என்று அறிவித்தார். இந்த ஒப்பந்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷர்ம் எல்-ஷேக் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா எல்-சிசி, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனின் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எமானுவெல் மாக்ரான், கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லாவிட்டாலும், ஒப்பந்தத்தை அவர் ஆதரித்துள்ளார். பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காசாவில் அமலுக்கு வந்தது போர் நிறுத்தம்..! வீடுகளை தேடிச்செல்லும் பாலஸ்தீனிய மக்கள்..!!
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம், ஹமாஸ் கைது செய்த 20 இஸ்ரேல் படையினரையும் விடுவிப்பதையும், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதையும் அடிப்படையாகக் கொண்டது. நேற்று காலை ஹமாஸ் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது. இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஃபா எல்லைத் துறைமுகம் திறக்கப்படும், காசாவுக்கு உதவிகள் அளிக்கப்படும். காசாவின் தற்காலிக நிர்வாகத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஏற்படுத்தும், இதை டிரம்ப் தலைமையிலான "பீஸ் போர்டு" கண்காணிக்கும்."இது அசாத்தியம் என்று அனைவரும் கூறியதை நான் சாதித்துவிட்டேன். காசா மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்," என்று உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா..? இது நிச்சியமாக நிலைத்திருக்கும் என கூறினார்.
எகிப்து அதிபர் எல்-சிசி, டிரம்பை "இந்தப் பிராந்தியத்தில் அமைதியைத் தேடிய ஒரே நபர்" என்று பாராட்டினார். இருப்பினும், ஹமாஸின் ஆயுத ஒழிப்பு, காசாவின் நீண்டகால ஆட்சி ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. உலக வங்கி மதிப்பீட்டின்படி, காசா மீட்புக்கு 53 பில்லியன் டாலர் தேவைப்படும். இந்த ஒப்பந்தம் டிரம்பின் வெளியுறவுக் கொள்கையின் உச்சமாகக் கருதப்படுகிறது.

2023 அக்டோபர் 7 இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் தொடங்கிய போர், 67,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், காசாவின் பெரும் அழிவையும் ஏற்படுத்தியது. இன்றைய கையெழுத்து, அந்த ரத்தத்தின் மீது அமைதியின் அடித்தளத்தைப் போட்டிருக்கிறது. உலகம் இதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அது நிலைத்திருக்குமா என்பதே கேள்வி..!
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது 2 ஆண்டு கால போராட்டம்..!! சைலண்ட் மோடுக்கு திரும்பும் காசா..!