சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்தின் உலகப் புகழ்பெற்ற புராதனச் சின்னங்களைப் பார்வையிட இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனத் இந்தியத் தொல்லியல் துறை (ASI) அறிவித்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்துக் கட்டணப் புராதனச் சின்னங்களையும் சுற்றுலாப் பயணிகள் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

உலகப் புகழ்பெற்ற கடற்கரைக் கோயில் (Shore Temple), ஐந்து ரதங்கள் (Five Rathas), அர்ஜுனன் தபசு, கிருஷ்ணனின் வெண்ணெய் உருண்டை பாறை (Butter Ball) மற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் இந்த இலவச அனுமதி பொருந்தும்.
இதையும் படிங்க: கீழடியில் இந்தியாவின் முதல் திறந்தவெளி அருங்காட்சியகம்!: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
பெண்களின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாகவும் ஆண்டுதோறும் தொல்லியல் துறை இந்தச் சலுகையை வழங்கி வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், தவெக தலைவர் விஜய்யின் மகளிர் தின விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றதாலும், ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். இந்த இலவச அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாமல்லபுரத்தின் சிற்பக் கலை அதிசயங்களைக் கண்டு வியந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!