தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெறும். வாக்குகள் எண்ணும் பணி மே 4 அன்று நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுமே, பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சோதனைகளின் நோக்கம், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், நகைகள் போன்றவற்றை விநியோகிப்பதைத் தடுப்பதும், தேர்தலை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதுமாகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படையினரால் கணிசமான அளவு பணமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேள்வி கேட்கும் பெண்களை "கூலிப்படை " வைத்து துன்புறுத்தும் திமுக..!! ஆதாரத்தோடு விளாசிய அதிமுக..!!
தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ரூ.2.37 கோடி ரொக்கம், ரூ.2.88 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; ரூ.16.42 கோடி உயர்ரக உலோகங்கள், ரூ.20.80 கோடி இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பூத் ஸ்லிப்பில் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!