தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசித்தவர் மகேந்திரன். இவர் அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராக இருந்தார். தீவிர அதிமுக விசுவாசியான இவர் அதிமுக தோல்வி, அதனை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரது இறுதி ஆசையாக எடப்பாடி பழனிச்சாமி தனக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அவரது உடலுக்கு மனவேதனையுடன் அஞ்சலி செலுத்தி இருந்தார்.

தஞ்சை மாவட்ட அதிமுக வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, உயிரிழந்த மகேந்திரன் அதிமுகவில் விசுவாசமாக பணியாற்றியவர் என்றும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகி மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
மகேந்திரனின் ஒரு வயது குழந்தையின் அனைத்து கல்வி கட்டணத்தையும் அதிமுகவே ஏற்கும் என்றும் உறுதியளித்தார். மேலும் மகேந்திரனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 30 லட்சம் ரூபாயும் தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பாக 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மிகுந்த மன வேதனை மற்றும் மிகுந்த அதிர்ச்சியிலும் ஒவ்வொரு அதிமுக தொண்டரும் இருப்பதாக வேதனை தெரிவித்தார். விசுவாசம் மிக்க தொண்டனை இழந்து அதிமுக தவிக்கிறது எனவும் இனி யாரும் இந்த மாதிரியான செயலில் ஈடுபடாதீர்கள் எனவும் “நா தழுதழுக்க” எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!