தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, நடிகராக இருந்த காலத்தில் விஜய் தனது திரைப்படம் தொடர்பான பிரச்சினைக்காக தன்னை சந்தித்ததாகவும், தனது வீட்டில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தளவாய்பட்டினத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“மற்றும் பலர் என்று கூறும் விஜய், எனது வீட்டிற்கு வந்து சுமார் 3 மணி நேரம் அமர்ந்து, அவரது படம் வெளியாக அனுமதி கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தார். இதை நான் எந்தக் கூட்டத்திலும் இதுவரை கூறியது கிடையாது. ஆனால், தற்போது அழுத்தமாகச் சொல்கிறேன்.
இதையும் படிங்க: அ.தி.மு.க.வை விட்டு ஏன் வெளியேறினேன்? தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு பேட்டி!
மறுநாள் திரையரங்கில் அவரது படம் வெளியாக வேண்டும். டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்ட நிலையில், அவர் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார். இந்த நன்றியாவது உங்களுக்கு இருக்கிறதா?
அவர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் ஒன்றிய அரசைத் தொடர்புகொண்டு பேசி, அந்தப் படம் வெளியாவதற்கு காரணமாக இருந்தவன் இந்த எடப்பாடி பழனிசாமிதான்.
எங்களைப் பற்றி பேச வேண்டாம். நல்லவர்கள் பேசினால் போதும்.
ஒரு இடத்தில் பேசினாலே போதும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் கூறினார்கள். ஆனால், தற்போது தெருத்தெருவாக, வீதி வீதியாகச் சென்று வாக்கு கேட்டு வருகிறார் முதலமைச்சர்.
முதலமைச்சர் தெருத்தெருவாகச் சென்றாலும், நீதிபதியாகச் சென்றாலும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
எவ்வளவு நாள் மாறுவார்கள்? ரீல்ஸ் போடுவதையும், ரீல் போடுவதையும் செய்து வருகின்றனர்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ள திரைப்பட விவகாரம் தொடர்பாக, கடந்த காலத்தில் நடிகர் விஜய் திரைப்பட வெளியீடு தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2017-ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பு விஜய் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
அதேபோல், 2020 டிசம்பரில் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டுக்கு முன்பும் விஜய், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!