அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபகால பிரசாரப் பேச்சுகள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு பாணியை நினைவுபடுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தன்னை ஜெயலலிதாவுக்கு இணையான வலிமையான தலைவராக நிலைநாட்டும் முயற்சியா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில் பழனிசாமி, “நமது ஆட்சி”, “நாம் செய்தோம்”, “நமக்கு தெரியும்” போன்ற பன்மை வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி வந்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக “நான்” என்று சொல்லாமல் “நாம்” என்றே பேசுவது வழக்கம். அந்தப் பாணியில் அவரது பேச்சு இருந்தது.
ஆனால் சில நாட்களாக அவரது பேச்சில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. “நான் கூறுகிறேன்”, “எனது உத்தரவு”, “நான் ஆணையிடுகிறேன்”, “எனது ஆட்சி” என்று தன்மை வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் “நான் உத்தரவிட்டுள்ளேன்”, “எனது அரசு”, “நான் முடிவு செய்துள்ளேன்” என்று உறுதியான, அதிகாரப்பூர்வமான தொனியில் பேசுவது வழக்கம். அந்தப் பாணியை இப்போது பழனிசாமியும் கையாளத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவினர் இதற்கு விளக்கம் அளிக்கையில், “கட்சியில் எல்லா முடிவுகளும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தவும், தான் எதற்கும் அஞ்சாத வலிமையான தலைவர் என்பதை மக்களுக்கு உணர்த்தவும் இந்தப் பாணியை பயன்படுத்துகிறார்” எனத் தெரிவிக்கின்றனர்.
தமிழக மக்கள் எப்போதும் வலிமையான, தீர்க்கமான தலைவர்களையே விரும்பியுள்ளனர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அதற்கு சிறந்த உதாரணம். தன்னையும் அத்தகைய வலிமையான தலைவராக மக்கள் மத்தியில் நிலைநாட்ட பழனிசாமி முயற்சிப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கருதுகின்றனர். மேலும், ஸ்டாலின் மற்றும் உதயநிதியை நேரடியாக விமர்சிக்கத் தொடங்கிய பிறகு அவரது பிரசாரத்தில் அனல் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்தப் புதிய பேச்சுப் பாணி அதிமுகவுக்குள் சிலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, பழனிசாமியின் இந்த உத்தி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியவரும். தமிழக அரசியலில் தலைவர்களின் பேச்சுப் பாணி எப்போதும் முக்கியப் பங்கு வகிப்பதால், பழனிசாமியின் மாற்றம் இப்போது பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!