குழந்தை பேறுக்காக ஏங்கும் குடும்பங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் மகப்பேறு மருத்துவர்களைப் பொதுமக்கள் தெய்வம் போல் பார்க்கிறார்கள் என்றும், மருத்துவத்துறையில் தமிழக மருத்துவர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில மகப்பேறு மற்றும் கருவுறுதல் மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய அளவிலான மகப்பேறு மருத்துவர்கள் மாநாட்டைத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் பங்கேற்றும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் காணொளி வாயிலாகவும் தொடங்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டனர்.
விழாவில் மகப்பேறு மற்றும் கருவுறுதல் மருத்துவர்கள் மத்தியில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உரையாற்றுகையில், "இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள்; நான் கூட என் மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்தே இந்த தேசிய மாநாட்டில் பங்கேற்றுள்ளேன். ஒரு குடும்பத்தில் குழந்தை பேறு தள்ளிப்போனால் அந்தப் பெண் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகள் நமக்குத் தெரியும். அத்தகைய நெருக்கடியான சூழலில் புதிய உயிரை உருவாக்க உதவும் மருத்துவர்கள் தெய்வமாகப் பார்க்கப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது! காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு - பாண்டிச்சேரி மாநில மகப்பேறு மற்றும் கருவுறுதல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயராணி காமராஜ், "தற்போது இந்தியாவில் 6 பேரில் ஒருவருக்குக் குழந்தையின்மை அல்லது கருவுறுதல் குறைபாடு உள்ளது. இதற்குப் பல்வேறு பொதுவான காரணங்கள் இருந்தாலும், ஆண் - பெண் இருபாலரிடமும் காணப்படும் உடல் பருமன், போதிய உடல் உழைப்பின்மை, அதிக மன உளைச்சல், புகை மற்றும் மது போன்ற பழக்கவழக்கங்களே முக்கியக் காரணங்களாக அமைகின்றன. எனவே இளைஞர்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதேபோலத் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பேறை நீண்ட காலம் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!