தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சமீபத்தில் வெளியிட்ட முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் தான். எம்ஜிஆர்-இன் 109வது பிறந்தநாள் நினைவு நாளில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமானது, குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களின் பெண் தலைவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2,000 ரூபாய் நேரடியாக போடப்படும் 'குல விளக்கு' திட்டம்.
இதுதவிர, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவது), 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, ஐந்து லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம் போன்றவை அடங்கும். இந்த அறிவிப்புகள் வெளியான உடனேயே, திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

திமுக அமைச்சர்கள் இதை 'காப்பி அடித்தல்' என்று குற்றம்சாட்டினர். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை திமுக ஏற்கனவே செயல்படுத்தியிருக்க, அதிமுக இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவிப்பது, திமுக திட்டங்களின் மீது 'ஸ்டிக்கர் ஒட்டுவது' போன்றதுதான் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக சாடினார். "திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு காப்பி எடுக்கலாம் என்று காத்திருந்தால் போதும்" என்று அவர் கிண்டலடித்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த ஐடியா இல்லை என்று கூறி, "திமுக போட்ட பாதையில் தான் அதிமுக பயணிக்கிறது" என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: சட்டசபை 3 ஆம் நாள் கூட்டம்... இபிஎஸ் வாக்குவாதம்..! அதிமுகவினர் வெளிநடப்பு..!
இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகளிருக்கு 1500 ரூபாய் வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021 இல் ஏற்கனவே தாங்கள் அறிவித்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் அதிமுக தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும் என்றும் குறிப்பிட்டார். மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி வைத்ததாக குற்றம் சாட்டினார். மாணவர்களின் வாக்குகளை கவரவே தற்போது இலவச மடிக்கணினிகளை திமுக அரசு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் திமுக அரசு மீது வெறுப்பு இருப்பதாகவும் அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... அமித் ஷா சந்திப்பு எதிரொலி..! இபிஎஸ் உடன் நயினார் முக்கிய ஆலோசனை...!