திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரி போன்ற முக்கியப் பிரச்சனையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார். மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார்.
அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல இங்குள்ள ஆளுநரும் நமது மாநில அரசைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில் காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரகுபதி குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வருவதையும், டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதையும், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தவெக அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!
அமைச்சர் நிர்மல் குமார் தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியதையும், காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் காரணமாக இருந்த கலைஞர் குறித்து அவதூறாகப் பேசியதையும் ரகுபதி கண்டித்தார். முதலமைச்சர் ஜோசப் விஜயோ அல்லது நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நிர்மல் குமாரின் கருத்துகளையும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார்.
இதையும் படிங்க: நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!