கோவை தெற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவோடு போட்டியிட வாய்ப்பளித்து, கோவை மாவட்டத்தில் பத்தில் 3 தொகுதிகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணிகளைத் தொகுதி முழுவதும் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூறும் போது : திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகளை ஒன்றிணைத்து, மக்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கேட்டு அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றி வருவதாகவும், வரும் காலங்களில் முழுமையான வெற்றிக்கு அயராது உழைப்போம் என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக என்ற இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு, ஒரு அணி ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய சூழல் நிலவுவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் ஏற்கனவே கருத்துக்களை முன்மொழிந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணியும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, புதிய அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்றக் கால அவகாசம் வழங்கி, விரைந்து செயல்படுத்தக் கேட்டுக்கொண்டுள்ளதை நினைவு கூர்ந்தார். சமூக வலைத்தளங்களில் மக்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதைக் குறிப்பிட்டு, இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை எப்படி கொண்டு சேர்க்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!
புதிதாக அரசு அமைந்தவுடன் ஏதோ இப்பொழுதுதான் முதன்முறையாக டாஸ்மாக் கடைகளைக் குறைத்தது போலவும், பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தது போலவும் ஒரு தோற்றத்தை ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின்படி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும், அதற்கு முன்பாக அதிமுக அரசிலும் கடைகள் குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், ஊடகங்கள் பொறுப்புணர்வோடு கடந்த கால நிகழ்வுகளையும் சேர்த்து உள்ளதை உள்ளபடி மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தொழில்துறை, உயர்கல்வி சேர்க்கை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் (நம்பர் ஒன்) உள்ளதையும், பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சியை எட்டியுள்ளதையும் பட்டியலிட்டார். கொள்கை ரீதியான முடிவுகளுடன் என்ன மாற்றங்களைச் செய்யப் போகிறோம் என்பதைப் புதிய அரசு தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளாகக் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய கழகத் தலைவரின் சாதனைகளைத் தக்க வைத்தாலே போதுமானது என்றார்.
புதிய அரசு இந்த நிலையை விட அடுத்த நிலைக்குத் தமிழ்நாட்டை அழைத்துச் சென்றால் பாராட்டலாம் என்றும், தமிழ்நாடு பின்னோக்கிச் செல்லாமல் இந்த நிலையைப் பாதுகாப்பதே மக்களுக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் இடத்தில் எஸ் பி வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தேன். அப்போது பேசியது தான் அவரிடம் அரசியலில் பேச எதுவும் இல்லை அரசியல் பேசவும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!