பெருந்துறையில் நேற்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தோப்பு வெங்கடாசலம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம், சென்னிமலையில் கனிம வள கடத்தலில் 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அவதூறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
யாரோ எழுதி கொடுத்ததை உண்மையை விசாரிக்காமல் பேசி உள்ளார். கனிம வள கொள்ளையில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் கிராமத்தை சேர்ந்த தற்போது பாஜக.வில் உள்ள சுப்பிரமணியம் என்பவரும் அவரது கூட்டாளியும் சேர்ந்து தொழில் செய்து வந்த நிலையில் நந்தகுமார் என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். சுப்பிரமணி அளித்த புகாரில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நந்தகுமார் மீது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நந்தகுமார், தற்போது அதிமுகவில் உள்ளார். சுப்பிரமணி பாஜக.வில் உள்ளார்.
நந்தகுமாருக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வகையிலும், எனக்கு எதிராக அரசியல் நாகரீகமற்ற முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக.வை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இருப்பதாகவும், எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த தன் மீது இது வரை எந்த வழக்கும் இல்லாத நிலையில், அபாண்டமான குற்றச்சாட்டை அண்ணாமலை கூறி உள்ளார். இது கண்டனத்திற்குரியது. அவர் சொன்ன குற்றச்சாட்டிற்கு ஆதாரங்களை அண்ணாமலை காட்டினால் இந்த தேர்தலில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகி கொள்கிறேன் என்பதை சவாலாக அண்ணாமலைக்கு தெரிவிக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!
பெருந்துறையில் அண்ணாமலை ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த அதிமுக வேட்பாளரின் உல்லாச விடுதியில் மது பானம் விற்பதில்லையா.? போதை கலாச்சாரம் குறித்து பேசும் அண்ணாமலை, போதை மையமாக ரிசார்ட் நடத்தும் பெருந்துறை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளார். அவதூறு பேசிய அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.
இதே போல் திமுக ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக அவர் மீதும் குற்றச்சாட்டை அண்ணாமலை கூறி உள்ளார். ஒப்பந்ததாரரை மிரட்டியதாக எந்த புகாரும் இதுவரை எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை. எந்த ஒப்பந்த்தாரரும் இத்தகைய குற்றச்சாட்டை கூறவில்லை. ஆனால் அண்ணாமலை, யாரோ எழுதி கொடுத்த தவறான தகவல்களை அவதூறாக பேசி உள்ளார். அரசியல் மாண்பை சீர்குலைக்கும் வகையில் குற்றச்சாட்டை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!