பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் சட்டப் போராட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை ஏப்ரல் 10 வரை நீட்டித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, தன்னைத் தலைவராக அறிவிக்கக் கோரியும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் டாக்டர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை எதிர்த்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, தந்தை - மகன் இடையேயான தனிப்பட்ட பிரச்சினைகள் நாளைக்குச் சரியாகலாம். ஆனால், ஒரு அரசியல் கட்சியை முன்னிறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், சட்ட விதிகளின்படியே முடிவெடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஏப்ரல் 10, 2026 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 'மாம்பழம்' சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக் கோரி இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவரான தந்தை - மகன் இடையேயான இந்த அதிகாரப் போட்டி, தேர்தல் நேரத்தில் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!