லக்னோ: நாடு முழுவதும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியில் முதல் முறையாக பெரிய மோசடி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், தாயும் இரு மகன்களும் சேர்ந்து தவறான தகவல்களை அளித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நூர்ஜஹான் என்ற பெண் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராம்பூர் ஜூவாலா நகரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பவர், தனது இரு மகன்கள் ஆமிர் கான், டானிஷ் கான் ஆகியோருக்காக SIR படிவத்தை சமர்ப்பித்தார். அந்தப் படிவத்தில் இருவரும் ஜூவாலா நகரில் வசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் இருவரும் பல ஆண்டுகளாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர். இதைத் தெரிந்துகொண்டே நூர்ஜஹான், மகன்களின் கையெழுத்தை தானே போட்டு, அவர்கள் இங்கேயே இருப்பது போல் மோசடி செய்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சரிபார்த்தபோது இந்த மோசடி வெளியானது. உடனடியாக நூர்ஜஹான் மற்றும் அவரது இரு மகன்கள் மீது 1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 31-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தவறான தகவல் அளித்தல், உண்மையை மறைத்தல் என்ற குற்றமாகும். இது தண்டனைக்குரிய குற்றம்.
இதையும் படிங்க: படிச்ச நமக்கே தலைசுத்துதே!! இடியாப்ப சிக்கலில் SIR!! ஏன் எதிர்க்கிறோம்? ஸ்டாலின் விளக்கம்!

ராம்பூர் மாவட்ட கலெக்டர் அஜய்குமார் திவேதி கூறுகையில், “SIR பணிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடக்கின்றன. தவறான தகவல் அளிப்பது தேர்தல் விதிகளை மீறுவதாகும். இதுபோன்ற மோசடிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நாடு முழுவதும் SIR பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணி தீவிரமாக நடக்கிறது. உண்மையான வாக்காளர்களை அடையாளம் காணவும், இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்களை நீக்கவும் இந்தப் பணி முக்கியமானது. ஆனால் ராம்பூரில் நடந்த இந்த மோசடி, SIR பணியின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
இது நாட்டிலேயே முதல் முறையாக SIR படிவத்தில் தவறான தகவல் அளித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரலாறு தெரியாதவர்கள் மிரட்டி பார்க்கிறார்கள்!! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரே திமுக!! - ஸ்டாலின் சரவெடி!