திருப்பூர் மற்றும் கோவையில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழக அரசு சார்பிலும், பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் முத்துசாமி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், "விவசாயப் பெருமக்கள் அறுவடை முடிந்து ஆனந்தமாக இல்லங்களிலும், ஊரோடும் கூடி மகிழும் விழாவே பொங்கல்; இதில் எந்த பேதத்திற்கும் இடமில்லை" எனத் தெரிவித்தார். சூரியனை வழிபடும் நாளாக இருந்தாலும், இயற்கை தந்த வரங்களுக்கு நன்றி சொல்லும் உன்னதமான தமிழ் விழாவாக இது அமைந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நொய்யல் ஆற்றை மீட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நொய்யலை மீட்டெடுப்பது இந்தப் பகுதி மக்களின் நீண்டகால எண்ணம்; அதனைப் புதுப்பிப்பது தஞ்சை விவசாயிகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பேருதவியாக அமையும்" என்றார். அதே சமயம், சினிமா விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு! பூங்கொத்து வழங்கி வாழ்த்து!
இன்று இரவு திருப்பூரில் தங்கும் அவர், நாளை காலை தனது இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் கொடிசியா (CODISSIA) வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர் பங்கேற்கும் நிகழ்விடங்களைச் சுற்றி ட்ரோன்கள் பறக்க விட இரண்டு நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவை விமான நிலையம் மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவை தற்போது மத்திய பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: “வெற்றியைப் போலவே தோல்வியும் எதார்த்தம்!” – சென்னையில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உருக்கம்!