காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைவது எப்படி எதார்த்தமோ, அதுபோலவே மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. புதிய நீதிக் கட்சித் தலைவரும், பல்கலைக்கழக நிறுவனருமான ஏ.சி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மருத்துவத் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். வெளி உலகம் எப்போதும் பூக்களால் நிறைந்தது என்று எண்ணாமல், சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என அவர் ஆற்றிய உரை அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கானோரைச் சிந்திக்க வைத்தது.
புத்தாண்டு பிறந்த பிறகு தான் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்று குறிப்பிட்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், 5,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் ‘பீல்டு’க்கு வந்திருந்தனர். குறிப்பாக, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், தனது மகள் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கான முதுகலை பட்டம் பெற்றதை ஒட்டி, ஒரு தந்தையாகப் பெருமிதத்துடன் இவ்விழாவில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: 8-வது நாளாக சென்னையில் வலுக்கும் போராட்டம்! நீதி கேட்ட ஆசிரியர்கள்.. நீளும் வழக்குகள் காவல்துறை அதிரடி!
மேடையில் மாணவர்களிடையே உரையாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன், “வெற்றியைக் கண்டு அகங்காரம் கொள்ளாதீர்கள், தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர்கள்; வெற்றியும் தோல்வியும் இரவு பகலைப் போன்றது” என்று தத்துவார்த்தமாகப் பேசினார். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் கடுமையான நேரங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும் என்றும், குறுக்கு வழியில் வரும் தற்காலிக வெற்றிகள் ஒருநாள் மிகப்பெரிய தோல்விக்குள் தள்ளிவிடும் என்றும் மாணவர்களை எச்சரித்தார். “பட்டம் பெற்றுவிட்டோம் என்பதோடு தேடுதலை நிறுத்திவிடாமல், மாறிவரும் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், “பிரதமர் மோடி 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவைப் பொருளாதாரத்தில் முதலிடத்திற்குக் கொண்டு செல்வதை இலக்காக வைத்துள்ளார்; 10 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமற்றதாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் தற்போது இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதைப் பார்க்கும்போது 2047-க்கு முன்பே நாம் முதலிடத்தைப் பிடிப்போம் என்பது உறுதி” என நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்கள் பெரிய இலக்குகளைத் தீர்மானித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாக அமைய வாழ்த்துக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் ஜனவரி 15 முதல் மெட்ரோ சோதனை ஓட்டம்!