ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் புரட்சித்தலைவி பேரவை மாநிலத் துணைச் செயலாளருமான இ.எம்.ஆர். ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கொங்கு மண்டல அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான இவர், 2016 முதல் 2021 வரை அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். தங்களது குடும்பம் கடந்த இரண்டு தலைமுறைகளாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து விசுவாசமாகப் பணியாற்றி வந்ததாகவும், தற்போதைய அரசியல் சூழலில் மனப்பூர்வமாக இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகுவது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய இ.எம்.ஆர். ராஜா, கட்சியில் இத்தனை காலம் அனைவருடனும் நட்போடு பழகிய நான், அதே நாகரிகத்தோடும் நற்பெயரோடும் கண்ணியமாக விலக விரும்புகிறேன்; கட்சியில் இருக்கும்போது துதி பாடிவிட்டு, வெளியே செல்லும்போது வசைபாடுவதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது. அதிமுகவில் இருந்து நான் விலகுவதற்கான முழுமையான காரணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் முறைப்படி நேரில் தெரிவிப்பேன் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??
மேலும், அந்தியூர் தொகுதி மக்களின் மனதில் என்றென்றும் நம்பிக்கைக்குரிய மனிதனாகத் தொடர்ந்து நிலைத்திருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறிய அவர், தற்போதைய நிலையில் வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணம் தமக்கு துளியும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதிமுகவிலிருந்து திடீரென விலகியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: "ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்": இபிஎஸ்-க்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்!