விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமாவதி, 7 வயதுடையவர். அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.
சிறுமியைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் தேடுதல் பணி நடைபெற்றது. மேலும், கடல் மற்றும் நீர்நிலைகளில் தேடுவதற்காக மீன்பிடி வலைகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?
மூன்று செல்போன் எண்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆய்வு செய்தும் எந்தத் துப்பும் கிடைக்காததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள சிவன் கோயிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்ற ஜோதிடம் பார்க்கும் சாமியார் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சிறுமி மாயமான நாளிலிருந்து அவர் திடீரெனக் காணாமல் போனது இந்தச் சந்தேகத்துக்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து, அவரது செல்போன் எண்ணைக் கண்காணித்த தனிப்படை போலீசார், நேற்று இரவு விழுப்புரம் அருகே உள்ள அரசூர் பகுதியில் சரவணனைப் பிடித்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இருப்பினும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகவும், சிறுமியின் மாயமான சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் தாயிடமும் நேற்று சுமார் நான்கு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இன்று ஆறாவது நாளாகச் சிறுமியைத் தேடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பெண் குழந்தை தொடர்பான வழக்கு என்பதால் முழுவதும் பெண் போலீசாரைக் கொண்ட இரண்டு புதிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையில் ஒரு தனிப்படையும், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புனிதா தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீசார் விழுப்புரம், வேலூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போக்சோ வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களின் பட்டியலைத் தயாரித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்த வழக்கில் அரசியல் கட்சியினரின் கவனமும் அதிகரித்துள்ளது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் புரட்சிப் பாரதம் கட்சி நிர்வாகிகள் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்.
இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக எம்.பி. தரணிவேந்தன் ஆகியோரும் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெருமைமிகு வரலாறு..! அதிமுக 55 ஆம் ஆண்டு விழா..!! EPS உற்சாகம்.!