சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ராஜ் சத்யன், ‘இளைஞர்களுக்கு வழி விடுங்கள்’ என சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலர் மகேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமே இந்தப் பதிவுக்கு காரணம்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த மகேந்திரன், கட்சியின் தோல்வியால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உடனடி விளக்கமாக ராஜ் சத்யன் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்தார்.
“தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் உழைக்கும் கட்சிக்கு எதிராக சிலரின் நடவடிக்கைகள் இருந்ததால் ஒரு தூய தொண்டரை இழந்திருக்கிறோம். தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்த்திருக்கலாம். இனியும் தொண்டர்களை மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழி விடுங்கள்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கட்டுன காசை திரும்ப கொடுங்க!! திமுகவில் கலகக்குரல்! விருப்பமனு பணத்தை திரும்பக்கேட்டு போர்க்கொடி!

இந்தப் பதிவு கட்சியில் பெரும் விவாதத்தை கிளப்பியது. சிலர் ராஜ் சத்யனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பதிவை ராஜ் சத்யன் நீக்கியுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “த.வெ.க., அமைச்சரவையின் சராசரி வயது 45. ஆனால் அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் சராசரி வயது 65ஐத் தாண்டுகிறது.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது. ராஜ் சத்யன், கோவை சத்யன், கல்யாண சுந்தரம், சிங்கை ராமச்சந்திரன் போன்ற இளம் தலைவர்கள் சார்பு அணிகளுக்கு அப்பால் முக்கிய பொறுப்பு பெற முடியவில்லை. இந்த மனக்குமுறலைத் தான் ராஜ் சத்யன் வெளிப்படுத்தினார். ஆனால் சீனியர்கள் இதை விரும்பவில்லை” என்றனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தலைமை மாற்றம் மற்றும் இளைஞர் பலப்படுத்தல் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜ் சத்யனின் பதிவு கட்சியின் உள் பதற்றத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!