சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் “டெல்டா எக்ஸ்போ 2026” என்ற மாணவர் புதுமை மற்றும் ஸ்டார்ட்அப் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, பேராசிரியர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 45-க்கும் மேற்பட்ட மாணவர் புதுமை அணிகளும், 30-க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்றும் அதனால் அனைவருக்கும் எனது இனிய வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். உங்களில் ஒவ்வொருவருக்கும் தனித்திறன் உள்ளது என்றும் ஆளுநராக இருப்பதால் எல்லாம் தெரியும் என்று மக்கள் நினைக்கலாம், ஆனால் அது உண்மை அல்ல., வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அவர்களுக்காக மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களுக்கும், இந்தியாவுக்கும், மனிதநேயத்திற்கும் பயன்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் தனது மாணவர் கால அனுபவங்களை பகிர்ந்த அவர், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டும் வாழ்க்கையின் இலக்கு அல்ல. சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள செயல்களைச் செய்வதே உண்மையான சாதனை என்று குறிப்பிட்டார். அதேபோல், ‘Quit India’ இயக்கத்தை எடுத்துக்காட்டாக கூறிய அவர், மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று பலர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதை நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!
எதிர்கால தலைமுறையினர் நம்மைப் பார்த்து “நீங்கள் அந்த காலத்தில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்கும் போது, நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் பங்களித்தோம் என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், சென்னை ஐஐடி உலகம் முழுவதும் அறியப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது என்றும், இங்கிருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை தங்களுக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!