மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். கடந்த மாதம் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என். ரவி, தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் பிரதமரைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டு கட்டங்களாகத் தேர்தலை அறிவித்துள்ளது: முதற்கட்டத் தேர்தல் (152 தொகுதிகள்) ஏப்ரல் 23, 2026 அன்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் (142 தொகுதிகள்) ஏப்ரல் 29, 2026. அன்றும் வாக்கு எண்ணிக்கை மே 04, 2026 அன்று நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு (Special Intensive Revision - SIR) எதிராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சிறைபிடித்த சம்பவத்தை உச்சநீதிமன்றம் இன்று (ஏப் 02) தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது தேர்தலைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சி எனத் தலைமை நீதிபதி சூரிய காந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குள்ளேயே மேற்கு வங்க டிஜிபி பியூஷ் பாண்டே மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் சித்த நாத் குப்தா நியமிக்கப்பட்டார். இது போன்ற நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் பாஜக-வின் முகவராகச் செயல்படுகிறது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இந்த மாற்றங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இன்று டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, பிரதமர் மோடியைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை அளித்ததாகத் தெரிகிறது. முன்னதாக மார்ச் 31- அன்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!