தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் H. ராஜா இன்று அளித்த செய்தியாளர் சந்திப்பில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம், இந்து விரோதச் செயல்பாடு மற்றும் வரலாற்றுத் திரிபு போன்ற பல விவகாரங்கள் குறித்துப் பேசினார். திருப்பரங்குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்று அழைப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், இந்த மலையை 'சிம்மக்கல்' என்று பெயர் மாற்ற வேண்டும் என்று ஆவேசமாகக் கோரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அமைந்துள்ள பகுதி 34 சென்ட் மட்டுமே என்றும், மீதமுள்ள மலை முழுவதும் முருகனுக்குச் சொந்தமானது என்றும் 1926இல் மதுரை மாவட்ட நீதிமன்றமும், 1931இல் லண்டன் பிரிவி கவுன்சிலும் தீர்ப்பு வழங்கியுள்ளதை H. ராஜா சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையைச் 'சிக்கந்தர் மலை' என்று திரிப்பது சதி என்றும், இந்து மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். எனவே, இந்த மலையின் பெயரை 'சிம்மக்கல்' என மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
1310-1311ஆம் ஆண்டுகளில் மாலிக்கபூர் தலைமையில் வந்த ஆப்கானியப் படைகள், சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி கோயில் உட்படப் பல இந்து கோயில்களைத் தகர்த்துச் சொத்துகளைக் கொள்ளையடித்ததையும், பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதையும் அவர் நினைவூட்டினார். அந்தப் படையெடுப்பின் கடைசி அரசனான சிக்கந்தர் பாதுஷாவின் தர்கா திருப்பரங்குன்றம் மலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய வரலாற்று உண்மையை மறைக்கவே மலைக்குப் பெயர் திரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!
மாலிக்கபூர் மற்றும் பிற அந்நியப் படையெடுப்பாளர்களால் செய்யப்பட்ட கொடூரங்கள் அனைத்தும் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று H. ராஜா வலியுறுத்தினார்.
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஒரு கையில் குரானையும், மறு கையில் கத்தியையும் வைத்துக்கொண்டு, மதம் மாறாதவர்களைக் கொலை செய்ததாகப் படித்த வரலாற்றை, தற்போது 'நல்லவர்' என்று மாற்றிப் பாடப்புத்தகங்களில் எழுதுவது உண்மையான வரலாற்றைத் திரிப்பதாகும் என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். நாட்டின் உண்மையான வரலாறு மக்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா பலமுறை வலியுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகளை இழிவாகப் பேசியுள்ள கி. வீரமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்து விரோத அரசு: கடந்த நான்கரை ஆண்டுகளில் 161 கோயில்களை இந்தத் தீய திராவிட அரசு இடித்துள்ளது என்றும், இது இந்து விரோத அரசு என்றும் வெளிப்படையாகச் சொல்வதற்குத் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக்கூட மதிக்காத சட்ட விரோத அரசு என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!