வடலூர் தைப்பூசத் திருவிழா மற்றும் ஜோதி தரிசனம் உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் புகழைப் போற்றும் வகையில் இரண்டு மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படுவதோடு, சர்வதேச அளவிலான மாநாடும் நடத்தப்பட உள்ளது.
வள்ளலார் பெருமான் தனது வாழ்நாளில் நீண்ட காலம் வாழ்ந்து, ஆன்மீகப் பணிகளை ஆற்றியப் பகுதியான திருவொற்றியூரின் முக்கிய நெடுஞ்சாலைக்கு, இனி “வள்ளலார் நெடுஞ்சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். சன்மார்க்க நெறியாளர்கள் மற்றும் வள்ளலார் அன்பர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்தச் சீரிய முடிவை அரசு எடுத்துள்ளது.
அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026: வள்ளலாரின் “தனிப்பெருங்கருணை” மற்றும் “சமரச சுத்த சன்மார்க்க” நெறிகளை உலகெங்கும் வாழும் மக்களிடமும், குறிப்பாக அயல்நாட்டினரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!
வள்ளலாரின் உயரியக் கருத்துகளான பசிப்பிணி போக்கல் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைச் சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தல்.
ஏற்கனவே திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வள்ளலார் பிறந்த நாளைத் ‘தனிப்பெரும் கருணை நாள்’ என அறிவித்தது, ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக ‘வள்ளலார் முப்பெரும் விழா’ நடத்தியது மற்றும் மருதூரில் அவர் வாழ்ந்த இல்லத்தைப் புனரமைத்தது எனப் பல பணிகளைச் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்ற உறுதிமொழியுடன் முதலமைச்சர் இந்த அறிவிப்புகளைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!