மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட்டை வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அதிர்ஷ்டமானது என்று வர்ணித்தார். இந்த பட்ஜெட் இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு வலுவான செயல் திட்டம் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் தனது உரையில் கூறியதாவது, இந்த பட்ஜெட் 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கான ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துள்ளது. இந்தியா தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் 'ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்' (Reform Express) இந்த பட்ஜெட்டின் மூலம் புதிய ஆற்றலையும் வேகத்தையும் பெறும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது இந்தியாவின் 'பெண் சக்தி' தேசத்தைக் கட்டியெழுப்புவதில் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் எனப் பாராட்டினார்.
இதையும் படிங்க: 2026-27 மத்திய பட்ஜெட்: தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..??
இந்தியர்கள் வெறும் 'வேகமாக வளரும் பொருளாதாரம்' என்ற அந்தஸ்துடன் மட்டும் திருப்தியடையவில்லை. 140 கோடி மக்களின் லட்சியம் இந்தியாவை விரைவில் உலகின் 3-வது மிகப்பெரியப் பொருளாதார நாடாக மாற்றுவதுதான். அதற்கு இந்த பட்ஜெட் வழிவகுக்கும் என்று உறுதியளித்தார்.
லோக்கல் முதல் குளோபல் வரை இந்திய தயாரிப்புகளைக் கொண்டு செல்லவும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (MSME) உலகளாவியப் போட்டிக்குத் தயார் செய்யவும் இந்த பட்ஜெட் பெரும் பலத்தை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
21-ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. விண்வெளி, செமிகண்டக்டர் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற எதிர்காலத் துறைகளில் இந்திய இளைஞர்கள் உலகையே வழிநடத்த இந்த பட்ஜெட் வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார்.
இதையும் படிங்க: வெற்று அறிவிப்புகளால் சரிந்த பங்குச்சந்தை.. மத்திய அரசை விளாசும் காங்கிரஸ்...!