ஹரித்வார்: கோவில் விழாவில் பிச்சைக்காரர் போல வேடமிட்டு, கழுத்தில் யுபிஐ கியூஆர் குறியீட்டை தொங்கவிட்டு யூடியூபர் ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. வெறும் 8 மணி நேரத்தில் அவருக்கு ரூ.4 ஆயிரம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருபவர் புருஷோத்தம் வசிஷ்ட். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முழுநேர யூடியூபராக செயல்பட்டு வரும் இவர், வித்தியாசமான வாழ்க்கை முறைகள் மற்றும் சவால்களை நேரில் அனுபவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கோவில் விழாவில் வித்தியாசமான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அங்கு பிச்சைக்காரர் போல உடை அணிந்து கொண்டு, கழுத்தில் யுபிஐ கியூஆர் குறியீட்டை மாட்டிக்கொண்டு பக்தர்களிடம் பணம் கேட்டுள்ளார். பிச்சைக்காரர்களின் அன்றாட வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை நேரடியாக அறிந்து கொள்வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!

சுமார் 8 மணி நேரம் கோவில் விழா பகுதியில் பிச்சைக்காரராக சுற்றிய அவர், அங்கு வந்த பக்தர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவரை பார்த்த சிலர் கடுமையாக விமர்சித்ததுடன், மோசமான வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சிலர் அவரிடம் கனிவாக நடந்து கொண்டு தங்களால் முடிந்த பண உதவியையும் செய்துள்ளனர்.
இந்த முயற்சியின் முடிவில் கிடைத்த தொகைதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 8 மணி நேரத்தில் மொத்தம் ரூ.4 ஆயிரம் கிடைத்ததாக புருஷோத்தம் வசிஷ்ட் தெரிவித்துள்ளார். இதன்படி கணக்கிட்டால், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.500 கிடைத்துள்ளது.
பிச்சை எடுப்பது என்பது மிகவும் எளிதான வருமான வழி என்ற எண்ணம் சிலரிடம் இருப்பதாகவும், ஆனால் உண்மையில் பிச்சைக்காரர்கள் சந்திக்கும் அவமானங்கள், மக்களின் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை நேரில் புரிந்து கொள்ளவே இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹரித்வார் கோவில் விழாவில் பிச்சைக்காரர் வேடமிட்டு அவர் மேற்கொண்ட இந்த சோதனை தொடர்பான வீடியோ தற்போது அவரது யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பணத்தைப் பெறுவதற்காக யுபிஐ கியூஆர் குறியீட்டை பயன்படுத்திய விதம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!